வெள்ளி, 30 அக்டோபர், 2015

விநாயகர் வழிபாட்டு பாடல்கள்


திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
திருமந்திரம்

வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க 
ஞானமத ஐந்கர மூன்றுவிழி நால்வாய்
யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம் 
சேக்கிழார் ஸ்வாமிகள்  

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
ஒளவையார்   

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
ஒளவையார் 

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் 
பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில் 
மேவும் கணபதியைக் கைதொழுதக்கால்.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.  
விருத்தாசல புராணம்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
விடிவினர் பயில் வலிவல உறை இறையே 
சம்பந்தர் 

நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம்.
கந்தர் அநுபூதி

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம். 
கந்த புராணம்
                                             
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!