புதன், 23 டிசம்பர், 2015

ஸ்ரீ லிங்காஷ்டகம்

பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும், உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த ஸ்லோகம் லிங்காஷ்டகம். இந்த ஸ்லோகத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.


"ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."

நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.


"தேவ முனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."
-
தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம், இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.


"ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் 
புத்தி விவர்த்தன காரண லிங்கம் 
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்." 

எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம், சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்."


"கனக மஹாமணி பூஷித லிங்கம் 
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் 
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."

மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம், நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம், தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.


"குங்கும சந்தன லேபித லிங்கம் 
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம் 
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்" 

குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம், பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.


"தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் 
பாவையர் பக்தி பிரேவச லிங்கம் 
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."

தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம், உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம், கோடி சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.


"அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் 
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் 
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."

எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம், எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம், எட்டு விதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.


"ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் 
ஸுரவன புஷ்ப ஸதாச்சித லிங்கம் 
பரமபர பரமாத்மக லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாதிவ லிங்கம்."

லிங்காஷ்டக மிதம் புண்யம் யப் படேச் சிவ ஸந்நிதெள 
சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே.

தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம், தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது, இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால், சிவலோகம் கிடைக்கும், சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.


|| --------- திருச்சிற்றம்பலம் --------- ||

சனி, 19 டிசம்பர், 2015

கோளறு திருப்பதிகம் - திருமறைக்காடு

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள்

திருமுறை : இரண்டாம் திருமுறை 85 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

கிரகதோஷங்கள் நீங்கவும் நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம். திருமறைக்காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்படும் சம்பந்தர் கோள்களின் பாதிப்பு நீங்கப் பாடிய கோளறு பதிகம்.


ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் மகிழ்ந்து உறவாடி இருந்த திருத்தலங்களுள் ஒன்று. அக்காலத்தில் தென்பாண்டித் திருநாட்டில் புறச்சமயம் ஓங்கியிருந்தது. சுவாமிகள் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த போது சிவ சமயத்தை மீட்டெடுக்க பாண்டிய நாட்டுக்கு எழுந்தருள வேண்டும். என பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி எனும் மாதரசி - ஞானசம்பந்தப் பெருமானுக்கு திருமுகம் அனுப்பியிருந்தாள். 

அதைக் கண்ட திருஞானசம்பந்தர் மதுரையம்பதிக்குப் புறப்படலானார். அப்போது, அப்பர் சுவாமிகள் - இவ்வேளையில் நாளும் கோளும் நல்லனவாக இல்லையே!.. - என, ஞானசம்பந்தரிடம் தனது கவலையைத் தெரிவித்தார். ஏனெனில் புறச்சமயத்தாரின் கொடுமைகளை அனுபவித்து மீண்டு வந்தவர் அப்பர் சுவாமிகள். மனம் வருந்திய அப்பர் சுவாமிகளுக்கு ஆறுதல் கூறி - திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய திருப்பதிகம் இது.

பாடல் எண் : 01
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பாடல் விளக்கம்
எம்பெருமான் மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு இருக்கும் அவன் களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவ சிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்.


பாடல் எண் : 02
என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பாடல் விளக்கம்
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்து நிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தை மலர்களாலான மாலை தரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால், ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம், ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம், ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம், பதினெட்டாவது விண்மீனான கேட்டை, ஆறாவது விண்மீனான திருவாதிரை, முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்.


பாடல் எண் : 03
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பாடல் விளக்கம்
அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை, திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும். அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும்.


பாடல் எண் : 04
மதிநுதன் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பாடல் விளக்கம்
பிறை போன்ற நுதலை உடைய உமையம்மையாரோடு ஆலின் கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை, கொன்றை மாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.


பாடல் எண் : 05
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பாடல் விளக்கம்
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னி மலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்ச பூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.


பாடல் எண் : 06
வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பாடல் விளக்கம்
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் - வரி – அதள் – அது - ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலை யானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.


பாடல் எண் : 07
செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பாடல் விளக்கம்
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின் மேல் ஏறி வரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச் சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர் காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம், அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.


பாடல் எண் : 08
வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பாடல் விளக்கம்
அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின் மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.


பாடல் எண் : 09
பல பல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பாடல் விளக்கம்
பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும், உமைபாகனும், எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான், முடிமீது கங்கை, எருக்க மலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரை மலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும், கெட்ட காலங்கள், அலைகடல், மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும். அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும்.


பாடல் எண் : 10
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பாடல் விளக்கம்
பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள் புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து, என் உளம் புகுந்துள்ள காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும். அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும்.


பாடல் எண் : 11
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

பாடல் விளக்கம்
தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம்பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன் முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 18 டிசம்பர், 2015

மங்களப் பதிகம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர், ஸ்ரீ தோணியப்பர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாயகி, ஸ்ரீ திருநிலை நாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 24 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


நல்ல ஒலி அலைகள் பரவி மங்களம் பெருகவும் திருமணம், பிறந்தநாள், மணிவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளில் வாழ்த்தவும் குடும்ப ஒற்றுமைக்கும் ஓத வேண்டிய "மங்களப் பதிகம்" ஞானசம்பந்தப் பெருமான் பெற்றோரை வணங்கிப் பாடிய திருக்கழுமலப் பதிகம். கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

ஸ்ரீ பிரமபுரீஸ்வரர்
பாடல் எண் : 01
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் 
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. 

பாடல் விளக்கம்‬:
உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 02
போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத் 
தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன் 
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் 
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார். அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார். 


பாடல் எண் : 03
தொண்டணை செய்தொழில் துயர் அறுத்து உய்யலாம்
வண்டணைக் கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை யாகவோர் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
தொன்று தொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு, வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 04
அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! வினையால் இத்துன்பம் வந்தது என்று எண்ணித் தளர்ச்சியுற்றுச் சோம்பியிருத்தலை ஒழிப்பாயாக. (இறைவனை வழிபட்டு இத்துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்பது குறிப்பு). ஒளிமிக்க வளையல்கள் முன்கைகளில் விளங்க, சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு, கயல் மீன்கள் அருகிலுள்ள வயல்களில் குதிக்குமாறு நீர் வளமும், நிலவளமுமிக்க திருக்கழுமலம் என்னும் வளநகரில் பல பெயர்கள் கூறிப் போற்றும்படி பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 05
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! நமக்குப் புகலிடம் இல்லையே என்று தளர்ச்சி அடைவதை ஒழிப்பாயாக! இடபக் கொடியினைக் கொண்டு விண்ணவர்களும் தொழுது போற்றும்படி, கடைவாயில்கள் உயர்ந்த மாளிகைகளையுடைய கழுமலம் என்னும் வளநகரில் பெண் அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 06
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! இறைவனைத் தவிர மற்றோர் பற்று எதுவுமில்லை. நான்கு வேதங்களையும் நன்கு கற்று, கற்றதன் படி ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும் வளநகரில் சிற்றிடையும், பெரிய அல்குலும் உடைய, அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு, என்னை ஆட்கொண்ட பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 07
குறைவளை அதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை விடுவாயாக. நிறைந்த வளையல்களை முன்கையில் அணிந்து, சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு, இருண்ட சோலைகளையுடைய அழகிய திருக்கழுமலம் என்னும் வளநகரில், பிறைச் சந்திரனைச் சடைமுடியில் சூடிப் பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 08
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
பெருமையுடைய கயிலை மலையை எடுத்த அரக்கனான இராவணன் அலறும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி இறைவர் அம்மலையின்கீழ் அவனை நெருக்கினார். பின் அவன் தன் தவறுணர்ந்து நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட, கூர்மையான வாளை அருளினார். திருக்கழுமலம் என்னும் வளநகரில் உயிர்கட்கு மிக்க இன்னருள் செய்யும் உமாதேவியோடு பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 09
நெடியவன் பிரமனும் நினைப்பரிதாய் அவர்
அடியொடு முடியறியா அழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும், பிரமனும் அடிமுடி அறியாவண்ணம் சிவபெருமான் அழலுருவாய் ஓங்கி நின்றனன். நறுமணம் கமழும் சோலைகளை உடைய திருக்கழுமலம் என்னும் வளநகரில் பெண் யானையின் நடைபோன்று விளங்கும் நடையை உடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 10
தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்து அடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
மாலை போன்று, பாயை விரும்பி ஆடையாக அணிந்துள்ள சமணர்களும், புத்தர்களும், இறையுண்மையை எடுத்துரைக்காது, தமக்குப் பொருந்தியவாறு கூறுதலால், அவற்றை விடுத்து, இறைவனின் திருவடிகளை வழிபட்டு உய்வீர்களாக. பசுமை வாய்ந்த அழகிய சோலைகள் வளர்ந்துள்ள திருக்கழுமலம் என்னும் வளநகரில் பேரறத்தாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 11
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே. 

பாடல் விளக்கம்‬:
நீர் வளமும், தேன் வளமும் பெருகிய திருக்கழுமல வளநகரில், மேல்நோக்கி வளைந்த பெரிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானை, அருந்தமிழ் வல்லவனான ஞானசம்பந்தன் செழுந்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓத வல்லவர்கள் விண்ணுலகை ஆள்வர். 


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 30 அக்டோபர், 2015

விநாயகர் வழிபாட்டு பாடல்கள்


திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
திருமந்திரம்

வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க 
ஞானமத ஐந்கர மூன்றுவிழி நால்வாய்
யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம் 
சேக்கிழார் ஸ்வாமிகள்  

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
ஒளவையார்   

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
ஒளவையார் 

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் 
பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில் 
மேவும் கணபதியைக் கைதொழுதக்கால்.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.  
விருத்தாசல புராணம்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
விடிவினர் பயில் வலிவல உறை இறையே 
சம்பந்தர் 

நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம்.
கந்தர் அநுபூதி

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம். 
கந்த புராணம்
                                             
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!